புதுடெல்லி:

வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட கணக்கும் ஜிஎஸ்டி கணக்கும் ஒத்துப் போகாதவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தவுள்ளது.


வருமான வரி செலுத்தியது மற்றும் ஜிஎஸ்டி செலுத்தியதற்கு இடையே ஆயிரக்கணக்கானோர் கணக்கில் வேறுபாடுள்ளது.

வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதை இது காட்டுகிறது. இந்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் பெரும்பாலான கம்பெனிகள் போலியானவை என்றும். அதில் போலியான இயக்குனர்கள் இடம்பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஜிஎஸ்டி கணக்கு காட்டாமல் முறைகேடு செய்வோருக்கு எதிரான கைது நடவடிக்கையில் தலையிட முடியாது என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், வருமான வரி தாக்கல் மற்றும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கு இடையே வேறுபாடு அதிகம் இருக்கும் நிறுவனங்களை வருவாய் துறை அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்பது தேர்தல் நேரத்தில் பாஜகவின் முக்கிய முழக்கமாக இருந்தது.

எனவே, தேர்தல் முடிந்த நிலையில், வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய வருவாய் அமைப்புகள் தயாராகி வருகின்றன.