போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்றுடன் 30வது நாளை எட்டியது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந் நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் மெஹ்ராலி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி நரேந்திர மோடிதான்.

குறைந்த பட்ச ஆதரவு விலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த ஆபத்தும் நேராது என்று உறுதி கூறுகிறேன். 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள்தான். போராடும் விவசாயிகளுடன்  பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு திறந்த மனதுடன் தயாராக இருக்கிறது என்றார்.