டெல்லி: வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்னமும் நீடிக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டங்களை பகுதி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை தர குழுவையும்  அமைத்துள்ளது.

இந் நிலையில் இன்று மத்திய அரசுடன் விவசாயி சங்கங்களின் பிரதிநிதிகள் 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம், தங்களுக்குள் குழு ஒன்றை அமைத்து, கோரிக்கைகள் பற்றிய வரைவை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவற்றை திறந்த மனதுடன் அரசு விவாதிக்கும் என்று கூட்டத்தில் அமைச்சர் தோமர் தெரிவித்தார்.

மேலும் வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கும் திட்டத்தையும் அரசு முன்மொழிந்துள்ளது. அதை விவசாய சங்கங்கள் ஏற்றால் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளது.

ஆனால் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.