டெல்லி: கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெளிநாட்டினர் சிலர் இந்தியா வர விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர்.

ஊரடங்கால் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாவுக்கு சென்றவர்கள், தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு ‘வந்தே பாரத்’ இயக்கத்தை நடத்தி வருகிறது.

இந் நிலையில், வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ள அமைச்சகம். யார், யார் இந்தியா வரலாம் என்று வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு உள்ளது.

திட்டமிடப்படாத வணிக மற்றும் முன்பதிவு செய்யப்படாத விமானங்களில் வணிக விசாவில் (விளையாட்டுக்கான பி 3 விசா தவிர்த்து) இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு வர்த்தகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாடு சுகாதார வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இந்திய சுகாதாரத் துறை வசதிகளில் பணியாற்றும் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் இந்தியா வரலாம்.

இந்தியாவில் அமைந்துள்ள வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் சார்பாக இந்தியாவுக்கு பயணம் செய்யும் வெளிநாட்டு பொறியியல், நிர்வாக, வடிவமைப்பு அல்லது பிற நிபுணர்களுக்கு இந்தியா வர அனுமதி தரப்படுகிறது.

பதிவுசெய்யப்பட்ட இந்திய வணிக நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவில் வெளிநாட்டு மூல இயந்திரங்கள் மற்றும் உபகரண வசதிகளை நிறுவுதல், பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பதற்காக பயணம் செய்யும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா வரும் மேற்கூறிய வெளிநாட்டு பிரஜைகள் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலிருந்து புதிய வணிக விசா அல்லது வேலைவாய்ப்பு விசாவைப் பெற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.