விவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை திருப்தி: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், 1 மாதத்துக்கும் மேலாக போராடி  வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 5 கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந் நிலையில் இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஜனவரி 4ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்றார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்ட 4 விவகாரங்களில் 2ல்  உடன்பாட்டு ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி நடைபெறுகிறது.

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வேளாண் சங்கங்கள் கோருகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிக்க அரசு தயாராக உள்ளது.

ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அந்தஸ்து கிடைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கருதுகின்றன. எனவே இது குறித்தும் மற்ற பிரச்னைகள் குறித்தும் ஜனவரி 4ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் என்றார்.