கார்ப்பரேட் வரிக்குறைப்பை அரசு நீக்க வேண்டும் : அபிஜித் பானர்ஜி

டில்லி

த்திய அரசு அறிவித்துள்ள கார்ப்பரேட் வரிக்குறைப்பை நீக்க வேண்டும் என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துக்கான  பொருளாதாரப் பிரிவு நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுஃப்ளோ மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.  அபிஜித் பானர்ஜி அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்றாலும் இந்தியாவில் பிறந்தவர் ஆவார்.   அபிஜித் மற்றும் அவர் மனைவி இணைந்து எழுதிய பொருளாதாரம் குறித்த புத்தக வெளியீட்டுக்காக அபிஜித் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளார்.

பிரபல செய்தி ஊடகமான தி இந்து நாளிதழுக்கு அபிஜித் பானர்ஜி அளித்த பேட்டியில், “பிரதமர் விவசாய நலத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு நல்ல திட்டமாகும்.  அந்த திட்டம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி நிலமற்ற விவசாயிகளுக்குப் பயன்பட வேண்டும்.   அதற்காக இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டமான 100 நாட்கள் வேலைத் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

அதற்கான நிதி வசதியை கார்ப்பரேட் வரிகளில் இருந்து பெற வேண்டும்.   சமீபத்தில் அரசு அறிவித்த கார்ப்பரேட் வரிக் குறைப்பை மாற்ற வேண்டும்.   இதனால் அரசுக்கு நிதி அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.  அந்த நிதியை பிரதமர் விவசாய நலத்திட்டத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.  ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையான அளவு நிதி வசதி உள்ளதால் இந்த வரிக்குறைப்பு தேவையற்ற ஒன்றாகும்.

அதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு இந்த நிதி சென்றடைவதன் மூலம் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.   இப்போது இவ்வாறு கார்ப்பரேட் வரிக்குறைப்பை மாற்றுவது மிகவும் அவசியமாகும்.  செலவழிப்போர் கைக்கு நிதி செல்வது தற்போதைய நிலையில் அவசியமான ஒன்றாகும்.

ஜிஎஸ்டி யில் அதிக விகித வரிப்பிரிவில் மேலும் பல பொருட்களைச் சேர்க்க வேண்டும்.  வருமான வரியை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியாது.  தற்போதைய பொருளாதார நிலையில் உற்பத்தி அதிகரிப்பு அவசியம் என்பதால் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்வது அவசியம் ஆகும்.     அதற்கு அரசின் வரி வருமானம் மட்டுமே பயன்படும்

தற்போது வாகன தொழிலில் வேலை இல்லாமல் லே ஆஃப் அளிப்பது அதிகரித்து வருகிறது.  இந்த நிறுவனங்கள் இதற்காக ஒரு நிதியை உருவாக்கி அதன் மூலம் லேஆஃப் நேரங்களில் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.  ” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி