டில்லி:

‘‘ராஜாங்க அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்திய வெளிநாட்டு சேவைக்கு (ஐ.ஃஎப்.எஸ்) மத்திய அரசு தனித் தேர்வு நடத்த வேண்டும்’’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற வெளியுறவு விவகார துறை குழு தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘பிரேசிலில் ஆயிரத்து 200 பேர் வெளிநாட்டு தூதரக பணிகளில் உள்ளனர். சீனாவில் 6 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் ராஜாங்க பணிகளுக்காக வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். நாம் அமெரிக்கா அல்லது சீனா அளவுக்கு எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், இந்தியாவில் 800 பேர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

சமீபத்தில் நடந்த குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சசிதரூர் கூட்டத்திற்கு நடுவே இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சமீபத்தில் வெளியுறவு விவகாரத் துறை கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐ.ஃஎப்.எஸ் பணியிடம் என்பது 912 ஆகும். இதில் தற்போது 770 பேர் மட்டுமே பணியாற்றுவது கவலை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகம் மற்றும் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள ராஜாங்க அதிகாரிகளின் எண்ணிக்கை பற்றாகுறையாக உள்ளது. கடந்த ஆண்டு ஐஃஎப்எஸ் பணிக்கு அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் 10 ஆண்டு பயிற்சிக்கு பின்னரே பணிக்கு தயாராகும் நிலை உள்ளது.

சசிதரூர் மேலும் கூறுகையில், ‘‘உங்களது திறனை வெளிப்படுத்த சிலர் தேவைப்படுகிறார்கள். தற்போதைய தேவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் நேரடி நியமனம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘இந்த சேவைக்கு தனியாக தேர்வு நடத்த வேண்டும். ஐஃஎப்எஸ் பணி என்பது உயரடுக்கு பதவி என்ற பொற்காலம் எல்லாம் மாறிவிட்டது. யுபிஎஸ்சி தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களை இதற்கு நியமனம் செய்ய வேண்டும். வெளிநாட்டு பணிகளில் யாருக்கு விருப்பம் இல்லையோ அவர்களை தான் இந்த பதவியில் அமர்த்த வேண்டிய நிலை உள்ளது.

ராஜாங்க அதிகாரிகளுக்கு என்று பிரத்யேக தகுதிகள் இருக்க வேண்டும். அதனால் இதற்கு தனித் தேர்வு நடத்துவதே சிறந்த முடிவாகும். உலக விவகாரங்களில் நாட்டம் இருப்பவர்கள் தான் ராஜாங்க பதவிக்கு சரியான நபர்களாக இருப்பார்கள். இதர தகுதிகளுடன் பல மொழி அறிந்த ஆற்றலும் அவசியம்’’ என்றார்.