டில்லி வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் :ரஜினிகாந்த் காட்டம்

சென்னை

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் டில்லியில் ஏற்பட்ட வன்முறைக்காக மத்திய அரசை நடிகர் ரஜினிகாந்த் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

 

டில்லி நகரின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் மோதிக் கொள்வதால் கடும் வன்முறை வெடித்துள்ளது.  இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.   துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்துள்ளது.   கலவரம் காரணமாக இது வரை ஒரு தலைமைக் காவலர் உள்ளிட்ட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படை வீரர்கள் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தர்.  அப்போது அவர், ”மத்திய உளவுத்துறையின் தோல்வியே டில்லியில் ஏற்பட்டுள்ள வன்முறைக்குக் காரணமாகும்.   இந்த வன்முறையை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.  மதத்தை வைத்து சில கட்சிகள்  போராட்டத்தைத் தூண்டி அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

என்னை பாஜகவின் ஊதுகுழல் என ஒரு சில பத்திரிகையாளர்களும் ஊடகவியலர்களும் கூறுகின்றனர்.  நான் எது உண்மையோ அதை சொல்கிறேன்.  எனக்குப் பின்னால் பாஜக இருப்பதாகச் சொல்வது எனக்கு வருத்தமாக உள்ளது.   குடிமக்கள் பதிவேடு குறித்து மத்திய அரசு தெளிவாக கூறியதால் குழப்பம் வேண்டுமென்றும் சிஏஏ வால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் நான் முதல் ஆளாக நிற்பேன் எனவும் ஏற்கனவே கூறி உள்ளேன்.

போராட்டங்களை அமைதி வழியில் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது.   டில்லி வன்முறைச் சம்பவங்களுக்காக நான் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் வேளையில் மத்திய அரசு போராட்டத்தைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.  ஆனால் டில்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை.  இதனால் எதிர்காலத்தில் பிரச்சினை உண்டாகும்.  டில்லி வன்முறையை ஒடுக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே குடியுரிமை சட்ட திருத்தம் சட்டமாக்கப்பட்டுள்ளது.  இதனால் மத்திய அரசு இதைத் திரும்பப் பெறும் என எனக்கு நம்பிக்கை இல்லை.  எவ்வளவு போராடினானாலும் மத்திய அரசு இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறாது” எனத் தெரிவித்துள்ளார்.