கொரோனா தடுப்பு மருந்து – பரிசோதனை விதிமுறைகளை தளர்த்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை விரைவாக்க, மருந்து பரிசோதனை விதிமுறைகளை மத்திய அரசு சற்று எளிதாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1940ம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் புதிய நடவடிக்கையின் மூலமாக, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் விரைவுப்படுத்தப்பட்டு, தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர், இத்தகைய முயற்சிகளில் ஈடுபட விரும்பும் ஒரு மருந்து நிறுவனம், பல சிக்கலான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது.

தடுப்பு மருந்துக்கான ஆய்வக சோதனைகளை மேற்கொள்ள, ஒரு நிறுவனம் பல விண்ணப்பங்களை செய்ய வேண்டும். அதேசமயம், அந்த சோதனை முடிவடைந்த பிறகும்கூட, பல விண்ணப்பச் செயல்பாடுகளை அந்த நிறுவனம் பின்பற்ற வ‍ேண்டும்.

கடந்த 2019 ஆண்டின் புதிய மருந்துகள் மற்றும் கிளினிக்கல் பரிசோதனை விதிமுறைகளின்படி, மத்திய லைசன்ஸிங் அத்தாரிட்டியிடம் அமனுதி கேட்க வேண்டிய தேவையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.