கோவை : கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை

கோவை

சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்ற ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அன்று மத்திய அரசு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவித்தது.  இதையொட்டி நாடெங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.  தமிழகத்தின் தொழில் நகரம் எனக் கூறப்படும் கோவை பகுதியில் தொழில் துறை முழுவதுமாக முடங்கி அனைவருடைய வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளானது.

தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா பரவல் மகாராஷ்டிரா, டில்லி,  கேரளா, தமிழகம், உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகமாக உள்ளன.   ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை முதன்மைச் செயலர் முருகானந்தம் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய தொழில் முனைவோருடன் நேற்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது அவர், “தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து நாள் ஒன்றுக்கு, 3,500 ஆக உள்ளது. தமிழகத்தில் பொது முடக்கம் கொண்டுவர முடிவு செய்யப்படவில்லை என்றாலும், கடுமையான விதிமுறைகளோடு, கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் பொறுப்பு, பொதுமக்களுக்கும் உள்ளது என்பதால், வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.  தொற்று  பாதிப்பு அதிகரித்தால், நடவடிக்கைகளும் தீவிரமாக இருக்கும்.  எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தாமாக முன்வந்து இரு வாரங்களுக்குள், தடுப்பூசி போடுவது அவசியம் ஆகும்.

45க்கு கீழ் வயதுள்ளவர்கள், இரு வாரங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அனைத்து  தொழில் நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்கள் உடல் நலனைக் காக்க வேண்டியது அவசியம் ஆகும்.   தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்ட விபரங்களைச் சுகாதாரத் துறைக்கு, அளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையொட்டி கோவை மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர், “அவசியம் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.  மேலும் சுகாதாரத்துறையினர் நூறு தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் நேரடியாக வந்து தடுப்பூசி செலுத்தினால் அதற்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம்” என உறுதி அளித்துள்ளார்.