130 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளிக்க அரசு முடிவு

டில்லி

டில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி உட்பட 130 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உயர்கல்வி கல்லூரிகள் தற்போது பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.   இது போன்ற கல்லூரிகள் பல தங்களுக்கு தன்னாட்சி வழங்க கோரிக்கை விடுத்துள்ளன.    கடந்த மாதம் 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசு தன்னாட்சி வழங்கியது.   அவற்றில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,  பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டாடா சமூக விஞ்ஞான கல்வி நிறுவனம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.

நாட்டில் தற்போது 868 உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன.   அவற்றில் 15% கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.   அதில் முதன்மையானது டில்லி பலகலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி ஆகும்.  இவ்வாறு தன்னாட்சி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு புதிய பாடத்திட்டம் அமைத்தல்,  புதிய படிப்புகள் தொடங்குதல்,   முக்கியமாக கட்டண நிர்ணயம் செய்தல் ஆகியவைகள் குறித்து சுயமாக முடிவு எடுக்க உரிமை கிடைக்கும்.

இவ்வாறு தன்னாட்சி கொடுப்பதை அரசு ”கல்வி தாராளமயமாக்கல்”  எனக் கூறும் அதே வேளையில் கல்வி ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.    இவ்வாறு தன்னாட்சி வழங்குவதால் கல்விக் கட்டணம் மிகவும் அதிகரிக்கும் எனவும் இதனால் ஏழை மாணவர்கள் துயருறுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.  டில்லியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த தன்னாட்சி வழங்குதலை எதிர்த்து கடந்த மாதம் போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர், “தன்னாட்சி அமைப்பதால் அரசின் நிதி உதவி நிறுத்தப் பட மாட்டாது.  எனவே கல்விக் கட்டணம் உயர வாய்ப்பில்லை”  எனக் கூறி உள்ளார்.

அதே நேரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ”தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதிகளில் 30% கல்விக் கட்டணத்தின் மூலம் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும்” என அறிவித்தது குறிப்பிடத் தக்கது.