ஆதாருடன், வாக்காளர் அட்டை இணைக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க அரசு முடிவு

டெல்லி: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு சட்டரீதியான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இந்நிலையில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் விதமாக, ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

டெல்லியில் இதுதொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் விதமாக, தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புகைப்பட தேர்தல் ஆணைய அட்டையுடன் 12 எண் கொண்ட ஆதாரை இணைப்பதற்கு அரசு சாதகமான பதிலை தந்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.