டில்லி:

நாடு முழுவதும் “ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு” என்ற திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்தியஅமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான ரேஷன் கார்டுகள் மூலம் மக்களுக்கு அரசின் உதவிப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தை அகற்றி விட்டு,  “ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு” என்ற திட்டம் மூலம் அனைத்து மாநிலங்களையும்  ஒருங்கிணைக்க மத்திய அரசு  முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இது தொடர்பான தகவல்களை மத்திய அரசு மாநிலங்களிடம் இருந்து பெற்று வைத்துள்ள நிலையில், விரைவில் அனைத்து மாநிலங்களும் ஒரே வகையான ரேசன் கார்டுகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

டில்லியில்  மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து மாநில உணவுத் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதில், பொது வினியோக திட்டத்தின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தில் உள்ள சிறு, சிறு இடையூறுகளை எப்படி தவிர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

அப்போது இந்த திட்டத்தில் ஏற்கனவே ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள் இணைந்து உள்ளதாகவும், மற்ற மாநிலங்களையும்  விரைவில்  இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நாடு முழுவதும் தற்போதுரு, பொது வினியோகத் திட்டம் மூலம் இந்தியாவில் சுமார் 81 கோடி பேர் மானிய விலையில் அத்தியாவசிய உணவு தானியப் பொருட்களைப் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள்.  பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் முறைகேடுகளை முழுமையாக தடுக்கும் வகையிலேயே  “ஒரே நாடு, ஒரே ரே‌ஷன்” திட்டம்  விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள், நாட்டில் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு ரேசன் கடை யிலும் சென்று எளிதாக தங்களுக்கு தேவையான பொருட்களை பெற முடியும். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்யும் ஏழை-எளிய கூலி தொழிலாளர்கள் மிகவும் பலன் அடைவார்கள் என்று கூறியவர், குறிப்பாக ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை வைத்திருப்பது தடுக்கப்படும். ஒரே நபர் சில மாநிலங்களில் பல அட்டைகள் வைத்திருப்பதும் முழுமையாக தடை பட்டு விடும்.

இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.