டில்லி

ரிசர்வ் வங்கியில் உள்ள உபரித்தொகையை வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு கேட்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள உபரித்தொகையை மத்திய அரசு எடுத்து நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரித்தொகையை பெற பாஜக அரசு திட்டமிடவில்லை என பாஜக தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மக்களவையில் அருண் ஜெட்லி வேறு விதமாக அறிவித்துள்ளார்.

மக்களவையில் அருண் ஜெட்லி, “மத்திய பாஜக அரசு நிதிப்பற்றாக்குறையை சரியான நிலையில் வைத்து சாதனை புரிந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கி குறிப்பிட்ட தொகையை கையிருப்பாக வைத்திருக்கும். அது போல இந்திய ரிசர்வ் வங்கி 28% தொகையை நிதியை உபரித் தொகையாக வைத்துள்ளது. இந்த தொகையை மத்திய அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும், வங்கிகளுக்கு முதலீடாகவும் அளிப்பதுகுறித்து நிபுணர்கள் குழு முடிவெட்க் உள்ளது.

தற்போதைய அரசு முந்தைய அரசை விட நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்துள்ளது. ஆகையால் ரிசர்வ் வங்கியின் உபரித்தொகையை எடுத்து நிதிபற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய நிலையில் மோடி அரசு கிடையாது. நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.