’ஆட்சி கவிழ்ப்பு’’ ஆடியோ கேசட் குரல் சோதனைக்கு அயல்நாடு பறக்கிறது…

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்-அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகக் கலகம் செய்த சச்சின் பைலட், துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஆட்சியைக் கவிழ்க்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்  டெலிபோனில் பேசிய ஆடியோ கேசட், அந்த மாநிலத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

‘’அந்த ஆடியோ கேசட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குரல் எனது குரல் அல்ல.’’ என அமைச்சர் செகாவாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆனால் ‘’ ஆடியோவில் உள்ள குரல் செகாவத் குரல் தான் . ’’ என முதல்வர் அசோக் கெலாட் உறுதி படத் தெரிவித்துள்ளார்.

‘’இதனை ராஜஸ்தான் போலீசார் குரல் பரிசோதனை செய்வதற்கு பா.ஜ.க.வினர் ஒப்புக்கொள்ள  வில்லை. இருக்கட்டும். அவர்கள் ஏன் அமெரிக்காவுக்கு அந்த ‘டேப்’பை குரல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கக்கூடாது?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘’அவர்கள் அனுப்புகிறார்களோ இல்லையோ , அந்த கேசட்டின் உண்மைத் தன்மை குறித்து அறிய நாங்கள், அதனைக் குரல் பரிசோதனைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என அதிரடியாகத் தெரிவித்துள்ளார், அசோக் கெலாட்.

-பா.பாரதி.