காஷ்மீரில் நிகழ்ந்துவரும் ஆபத்தை மறைக்க முயல்கிறது அரசு: குலாம்நபி ஆசாத்

புதுடெல்லி: காஷ்மீரில் ஏதோ ஆபத்தான ஒன்று நிகழ்ந்து வருவதாகவும், ஆனால் மத்திய அரசு அதை மறைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத்.

காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி, திமுக தலைமையில் 9 எதிர்க்கட்சிகள் டெல்லியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத் இவ்வாறு பேசினார்.

அவர் கூறியதாவது, “இப்போது நடப்பது ஜனநாயகம் அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்வது அவசியம். அப்படி உணர நாம் தவறினோம் என்றால், நாம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.

சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ பின்வாசல் வழியாக வந்து நசுக்கியுள்ளனர். காஷ்மீரில் ஏதோ ஆபத்தான ஒன்று நடந்துகொண்டுள்ளது. ஆனால், இந்த அரசு அதை மறைக்கப் பார்க்கிறது.

உண்மையை வெளிக்கொணரும் பொருட்டு மீடியாக்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. அதேமசயம், பிரதமர் பொறுப்பில் வாஜ்பாய் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.” என்று குற்றம் சாட்டினார் குலாம் நபி ஆசாத். அவர் தற்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கிறார்.

காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின.