இஸ்லாமாபாத்:

இந்தியாவுடன் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் அரசு தயாராக இருந்தால் அதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி குவமர் ஜாவித் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் மத்தியில் ராணுவ தளபதி பேசுகையில், ‘‘ இந்தியா, ஆப்கன் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவு சுமூகமான முறையில் இருக்க வேண்டும்.

இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்த அரசியல் தலைவர்களை முயற்சி செய்ய வேண்டும். போர் மூலம் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் இந்திய பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு முன்வந்தால் அதை ராணுவம் முழுமையாக ஆதரிக்கும்’’ என்றார்.

பாகிஸ்தான் அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அந்நாட்டு ராணுவம் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் பாகிஸ்தானில் ராணுவம் வலுவுள்ள சக்தியாக விளங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயல்பாட்டை பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அதோடு பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் இனக்கமான உறவு ஏற்படுத்த ராணுவம் தடையாக இருந்துவந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இத்தகைய பேச்சு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.