முடிவு மத்திய அரசின் கையில்; பிசிசிஐ கையில் அல்ல – கூறுகிறார் விளையாட்டு அமைச்சர்!

புதுடெல்லி: ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்யும் என்றும், பிசிசிஐ முடிவு செய்யாது என்றும் கூறியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

அவர் கூறியதாவது, “ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அனுமதியை அளிப்பது குறித்து மத்திய அரசே முடிவுசெய்ய முடியும். பிசிசிஐ முடிவெடுக்காது. நாடு முழுவதும் கொரோனா பரவல் எந்தளவிற்கு கட்டுக்குள் உள்ளது என்பதைப் பொறுத்தே இந்த முடிவு அமையும்.

நாட்டின் பொதுசுகாதாரத்திற்கு ஆபத்து இல்லை என்ற நிலை இருந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்த முடியும். விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட வ‍ேண்டுமென நாங்கள் விரும்பினாலும், அதற்காக நாட்டின் ஆரோக்கியத்தை அடகு வைக்க முடியாது” என்றார் அமைச்சர்.

கடந்த மார்ச் மாதமே துவங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், கொரோனா காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடிகளைக் கொட்டும் அத்தொடரை, இந்தாண்டிற்குள் எப்படியேனும் நடத்திவிட வேண்டுமென்ற முயற்சியில் பிசிசிஐ அமைப்பு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருவது நாம் அறிந்ததே.