டில்லி

நாடெங்கும் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களும் இணைக்கப்பட்டு அவைகளுக்கு அரசு 100% நிதி உதவி அளிக்கும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவி ஏற்றுள்ள மோடியின் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வி பதவி ஏற்றுள்ளார். அவர் பதவி ஏற்றதும் அரசு சிறுபான்மையினர் மேன்மைக்காக பல புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். அதை ஒட்டி இஸ்லாமியர்களின் வக்ஃப் வாரியம் குறித்த அறிவிப்பை நேற்று அமைச்சர் வெளியிட்டார்.

நேற்று டில்லியில் 80 ஆவது வக்ஃப் வாரிய குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அமைச்சர் நக்வி, “நாடெங்கும் சுமார் 5.7 லட்சம் வக்ஃப் வாரிய சொத்துக்கள் உள்ளன. அவைகளை இணைத்து டிஜிடல் மயமாக்கப்பட உள்ளன. இந்த வக்ஃப் வாரியங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு அவற்றின் மூலம் சிறுபான்மை மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவைகளுக்கு அரசு உதவ உள்ளது.

வக்ஃப் வாரியம் நடத்தும், பள்ளிகள், கல்லூரிகள், ஐடிஐ கள், பாலிடெக்னிக்குகள், சமுதாய கூடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 100% நிதி உதவி அளிக்க உள்ளது. முந்தைய அரசு நாடெங்கும் 90 மாவட்டங்களில் மட்டும் சிறுபான்மையினர் முன்னேற்ற நடவடிக்கைகளை செய்தது. மோடி அரசு அதை 308 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித் தொகைகள் அளிக்கப்பட உள்ளன. இவற்றில் 50% பெண்களுக்கு அளிக்கப்படும். பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு மீண்டும் கல்வியை தொடரவும் உதவித் தொகை வழங்கப்படும். மதரசாக்களின் ஆசிரியர்களுக்கு இந்தி, ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் கம்பியூட்டர் ஆகிய கல்விகளில் பயிற்சி அளிக்கபடும்” என தெரிவித்தார்.