டெல்லி:

‘‘விஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு திரும்ப பெறப்படமாட்டாது’’ என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தவிர இதர வாகனங்களில் சைரன் விளக்குகள் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு இந்த விவகாரம் குறித்து கூறுகையில், ‘‘நாட்டின் முக்கியமான நபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மற்றபடி எவ்வித பாகுபாடும் கிடையாது. நாட்டின் நலன் கருதி விஐபி.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது முக்கியமானதாகும்’’ என்றார்.

‘‘விஐபி கலாச்சாரத்திற்கு மத்திய அரசு முடிவு கட்டியது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் விஐபி தான். இது அரசின் தத்துவம். இது சாதாரண தொடக்கம் தான். எனினும் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்ற தகவல் மக்களிடம் சென்றடைய வேண்டும். இந்த உத்தரவை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்’’ என்றார்.

ராமர் கோவில் விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘ இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் புதிய விஷம் எதுவும் இல்லை’’ என்றார்.

பாஜ தலைவர்கள் அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான சதி குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரிக்க சிபிஐ.க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உ.பி. முதல்வராக இருந்த கல்யாண்சிங் தற்போது ராஜஸ்தான் கவர்னராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வளைதளங்களில் எதிர்மறையான தகவல்கள் பரவுவது குறித்த கேள்விக்கு நாயுடு பதில் கூறுகையில், ‘‘இது பெரிய பிரச்னை. இது குறித்து சிந்தித்து, விவாதிக்கப்பட வேண்டும். சமூக வளைதளங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. இந்த சமூகம் தான் விவாதித்து ஒரு இறுதி முடிவுக்கும் வரவேண்டும்’’ என்றார்.