பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை! கிரெடாய் விழாவில் ஓபிஎஸ் தகவல்

சென்னை:

ந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் வீட்டுவசதி கண்காட்சி-2020 தொடங்கியது. இதை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில்  பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை என்று கூறினார்.

கிரெடாய் அமைப்பு (Confederation of Real Estate Developers Association of India) சார்பில் 13-வது வருடாந்திர வீட்டுவசதி கண்காட்சி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் நடுத்தர மக்கள் தங்களது கனவு இல்லங்களை வாங்க இந்தக் கண்காட்சி பெரிதும் உதவும். மேலும், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகள் – 2019-ன்படி, குறைந்த அகலம் கொண்ட சாலைகளை ஒட்டிய மனைகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிக தளங்களுடன் கூடியகூடுதல் குடியிருப்புகளை கட்டிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் வீடுகளின் விலை கணிசமாக குறைவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்துவரும் நிலத்தின் மதிப்பை கருத்தில் கொண்டு, நடுத்தர மற்றும் நலிந்தவருவாய் பிரிவினர் நகர் பகுதிகளில் வீடுகள் வாங்கி பயன்பெறும் நோக்கத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தளப்பரப்பு குறியீடான 1.5-லிருந்து 0.5 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதை கட்டுமான துறையினர் வரவேற்றுள்ளனர். மேலும், உயரமான கட்டிடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு 2.50-ல்இருந்து 3.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அதே பரப்பளவு உள்ள மனையில் அதிக அளவில் குடியிருப்புகள் கட்ட இயலும். இதனால், குடியிருப்புகளின் விலை கணிசமாகக் குறையும்.

கிரெடாய் சார்பில் பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்துவதற்கும் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

விழாவில், தமிழக அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் டி.கார்த்திகேயன், டிடிசிபி ஆணையர் சந்திரசேகர் சக்காமுரி, எஸ்பிஐவங்கியின் தலைமை பொதுமேலாளர் வினய் டான்செ, கிரெடாய் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன், சென்னை தலைவர் ஹபீப் உள்ளிட்டோர் பங்கேற்றுபேசினர்.

நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 75 நிறுவனங்களின் 400-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

21 லட்சம் ரூபாய் முதல் 11 கோடிக்கும் மேற்பட்ட விலை மதிப்புகளில் கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 70 டெவலப்பர்கள் வழங்கும் 400-க்கும் அதிகமான குடியிருப்பு திட்டங்கள் இடம்பெறுகின்றன.

இக்கண்காட்சியில் இடம்பெறும் அனைத்து குடியிருப்பு செயல்திட்டங்களும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டவை என்று கிரெடாய் சென்னை அறிவித்திருக்கிறது. வீடுகளை வாங்குபவர்களுக்கு சிரமமில்லாத, எளிதான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை இது உறுதிசெய்கிறது என்று கிரெடாய் தெரிவித்திருக்கிறது.

கிரெடாய் அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன் இந்நிகழ்வில் பேசும்போது, இத்தொழில்துறையில் அனைவரும் வாங்கக்கூடியவாறு விலை குறைவான வீடுகளுக்கான தேவையை இது நிச்சயம் உருவாக்கும். அதுமட்டுமன்றி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டிட விதிகளில் சமீபத்தில் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள், இம்மாநகரில் எளிய விலையிலான வீடுகளுக்கான தேவையையும், உருவாக்கலையும் பெரிதும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று கூறினார்.

இந்த ஃபேர்புரொ 2020 கண்காட்சியில் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, யுனியன் வங்கி மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஆகிய வங்கிகள் பங்கேற்றுள்ளன.