டெல்லி:
2016-17ம் நிதியாண்டில் வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 17.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிரதமரில் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் மட்டும் ரூ. 2,300 கோடி கிடைத்துள்ளது

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்ட பிறகு கருப்பு பணத்தை வெளி கொண்டு வருவதற்காக பிரதமரின் காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் கடந்த டிசம்பர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு நபர் ரொக்கம் அல்லது டெபாசிட் மூலம் வருவாயை வெளிப்படுத்தினால் அதற்கு வரி, சர்சார்ஜ், அபராதம் என மொத்தம் 49.9 சதவீதம் விதிக்கப்படும்.

மேலும், இவ்வாறு செலுத்தப்படும் டெபாசிட்டில் 25 சதவீதம் பிரதமர் காரிப் கல்யாண் திட்டத்தில் வட்டி இல்லாமல் 2016ம் ஆண்டு முதல் 4 ஆண்டுக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருந்தது. 2016&17ம் ஆண்டில் வரி விதிப்பு வருவாய் மூலம் கிடைத்த தொகையில், இந்த திட்டத்தின் மூலம் மட்டும் 2 ஆயிரத்து 300 கோடி வசூலாகியுள்ளது. அதோடு கணக்கில் வராத 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கான வருவாய் வெளி கொண்டு வரப்பட்டுள்ளது.

2016-17ம் ஆண்டில் ரூ. 17.10 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கலான பட்ஜெட்டின் மறுமதிப்பீடு அறிக்கையில் ரூ. 16.97 லட்சம் கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ‘‘கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது’’ என்று நிதியமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

‘‘கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக ரூ. 17.10 லட்சம் கோடி வரி வசூலானது’’ என்று வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார்.

நேரடி வரி விதிப்பு 14.2 சதவீதம் கூடுதலாக ரூ. 8.47 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறைமுக வரி விதிப்பு 22 சதவீதம் கூடுதலாக ரூ. 8.63 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

நிகர நேரடி வரி விதிப்பு ரூ. 8.47 லட்சம் கோடி என்ற அதன் நூறு சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. கட ந்த மார்ச் மாதம் வரை மறைமுக வரி விதிப்பு 101.35 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. மறு மதிப்பீட்டில் ரூ. 8.5 லட்சம் கோடி என்ற மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் மொத்த வருவாயில் கார்பரேட் வரி விதிப்பு 13.1 சதவீதமு, தனி நபர் வருமான வரி 18.4 சதவீதமும் அதிகரித்துள்ளது. திருப்பி செலுத்தப்பட்ட (ரீ பண்ட்) பிறகு நிகர வளர்ச்சியில் கார்பரேட் வரி விதிப்பு 6.7 சதவீதமும், தனி நபர் வருமான வரி 21 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. 2016 ஏப்ரல் முதல் கடந்த மார்ச் வரை ரூ. 1.62 லட்சம் கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015-16ம் ஆண்டை விட 32.6 சதவீதம் அதிகமாகும்.

நேரடி வரி, மத்திய கலால் வசூல் 33.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2016-17ம் ஆண்டில் மொத்தம் ரூ. 3.83 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. சேவை வரியும் 20.2 சதவீதம் அதிகரித்து ரூ. 2.54 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. சுங்க வரி 7.4 சதவீதம் அதிகரித்து ரூ. 2.26 லட்சம் கோடி என்ற நிலையில் உள்ளது.