டெல்லி

பாஜக எம்பியும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தன் வீட்டுப் பணிப் பெண்ணின் இறுதிச் சடங்கை கொரோனா ஊரடங்கு காரணமாக தானே முன்னின்று நடத்தியுள்ளார்.

ரசிகர்களால் மட்டுமின்றி சில கிரிக்கெட் வீரர்களாலும் ‘கரடுமுரடான நபர்’ என கருதப்படுபவர் கௌதம் கம்பீர்.

தன் வீட்டில் 6 ஆண்டுகள் பணிப்பெண்ணாக இருந்த சரஸ்வதி பத்ராவின் இறுதிச் சடங்கை தானே முன்னின்று நடத்தி பலரையும் நெகிழ வைத்துள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த சரஸ்வதி பத்ராவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்துள்ளது. டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 21 அன்று உயிரிழந்தார்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் சரஸ்வதியின் உடலை ஒடிசாவில் உள்ள சொந்த ஊருக்கு அனுப்ப முடியவில்லை.

இதனால் கம்பீரே முன்னின்று சரஸ்வதியின் இறுதிச்சடங்கை நடத்தி நல்லடக்கம் செய்துள்ளார்.

இந்நிகழ்வை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள கம்பீர், “என் குழந்தையை பார்த்துக்கொண்ட அவர், என் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு இறுதிச் சடங்கு செய்வது என் கடமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் மனிதத்தை மட்டுமே நேசிப்பவன். சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது மனிதம். அதுவே நம் நாட்டின் பெருமை” எனத் தெரிவித்துள்ளார்.

கம்பீரின் இச்செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.