சென்னை:

லைநகர் சென்னையில் இயக்கப்பட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், முதல் கட்டமாக  50 பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு டெல்லி அரசு பேருந்தில், மாணவி நிர்பயா  பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவசரகால எச்சரிக்கை கருவி, ஜிபிஎஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதுகுறித்து  அப்போது பேசிய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி,  நாடு முழுவதும் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் சிசிடிவி, அவசர கால உதவி சுவிட்ச், ஜிபிஎஸ் வசதி தொடர்பான சாதனங்கள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளதாக கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து பல மாநிலங்களில், பெண்களின் பாதுகாப்பு கருதி அரசு பேருந்துகளில் சிசிடிவி காமிரா வசதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகளில் முதல்கட்டமாக  50 பேருந்து களில் ஜிபிஎஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதனப்டி தாம்பரத்தில் இருந்து பாரிமுனை வரை இயக்கப்படும்  21G  மற்றும், பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை இயக்கப்படும் 101 என்ற பேருந்தும், சென்னை பாரிமுனையில் இருந்து கேளம்பாக்கம் வரை இயக்கப்படும் 570  ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 50 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘இந்த தொழில்நுட்பத்தின் படி பயணிகள் தாங்கள் இறங்குவதற்கு முன்பாக 100 மீட்டருக்கு முன்னதாக பேருந்தின் உள்ள பொருத்தப்பட்டுள்ள 6 ஒலிபெருக்கியின் மூலமாக அறிவிப்பு அளிக்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் புதிதாக பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும் என நம்பப்படுகிறது. மீதம் உள்ள  பேருந்துகளிலும்,  இந்த வசதி விரைவில் கொண்டுவரப்படும் என சென்னை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.