சென்னையில் 390 இடங்களில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 390 இடங்களில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் வியாழக்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. அப்போது,  தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ததால், பல இடங்களில் தகவல் தொடர்பும், மின் இணப்பும் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் மரங்கள் சூறாவளி காற்றால் அடியோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 390 இடங்களில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: விரைவில் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும். மின் விநியோகம் தொடர்பான தகவலுக்கு அவசர தொடர்பு எண்களை அழைக்கலாம் என்று கூறினார்.