முனம்பம், கேரளா

மீன்களை விற்று பிழைக்கும் பட்டதாரிப் பெண் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

திருச்சூரை சேர்ந்த ஜயசேனன் மற்றும் மணி ஆகியோரின் மகள் மனீஷா.   இவர் பட்டப்படிப்பு முடித்தவர்.    இவர் தந்தை இவரை மீன் விற்று படிக்க வைத்துள்ளார்.    தந்தை  ஒரு விபத்தில் சிக்கிய பின் அவரால் வியாபாரம் செய்ய முடியவில்லை.   இதனால் மனீஷா தானே மீன் விற்க ஆரம்பித்துள்ளார்.     அவரது கல்லூரித் தோழியான பிரியாவும் அவருடன் மீன் விற்க வந்துள்ளார்.    இவர்கள் முதலில் அருகிலுள்ள கடற்கரையில் இருந்து மீன்கள் வாங்கி அய்யந்தோல் அருகிலுள்ள குடியிருப்புகளில் விற்க ஆரம்பித்துள்ளனர்.   பிரியாவின் தந்தையும் ஒரு விபத்தில் கை முறிவு ஏற்பட்டவர்.

பிறகு இருவரும் இணைத்து ஒரு கடையை அமைத்துள்ளனர்.    இவர்கள் சீக்கிரமே பிரபலம் அடைந்தனர்.   சுமார் ஆறுமாதங்களுக்கு முன் இவர்களைப் பற்றிய செய்திகள் இவர்களின் புகைப்படங்களுடன்  பத்திரிகையில் வந்தன.    அனைவராலும்  பாராட்டப் பட்ட இந்த தோழிகளில் பிரியா சட்டப்படிப்பு படிக்க துவங்கி உள்ளார்.

மனீஷாவின் நண்பர்களில் ஒருவர் கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத் தலைவர் அபிமன்யு (வயது 50) ஆவார்.    இவர் பாஸ்போர்ட் எடுக்க கொச்சி வரை செல்ல வேண்டி இருந்தது.  இவரை மனீஷா தனது ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றுள்ளார்.   திரும்பி வரும் போது  முனம்பம் என்னும் இடத்தில் இவர்கள் வந்த ஸ்கூட்டியில் ஒரு லாரி மோதி உள்ளது.   அந்த விபத்தில் அங்கேயே மனீஷா மரணம் அடைந்தார்.   படுகாயம் அடைந்த அபிமன்யூ அருகில் உள்ள பரவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கேரளாவே அதிர்ச்சி அடைந்துள்ளது.    ஆறு மாதங்களுக்கு முன்பு  அவருடைய சிரித்த முகத்திற்காகவே பத்திரிகை வாசகர்களால் பாராட்டப் பட்ட மனீஷா விபத்தில் மரணம் அடைந்தது அனைவர் மனதையும் உருக்கி உள்ளது.