பட்டதாரிப் பெண் நடத்தும் பாரம்பரிய குளிர்பானக் கடை

பட்டதாரிப் பெண் நடத்தும் பாரம்பரிய குளிர்பானக் கடை
அந்தக்காலத்தில் நாம் அருந்தி மகிழ்ந்த குளிர்பானங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு, பெப்ஸி, கோக் என்று வெளிநாட்டுப் பானங்கள் மிகவும் பிரபலமாகிவிட்ட நிலையில் மீண்டும் அவற்றிற்கு உயிர் கொடுத்து தனது கடையில் வெற்றிகரமாக விற்று வருகிறார் சூர்யா என்னும் பட்டதாரிப்பெண்.
மதுரை லேடி டோக் கல்லூரி சாலையோரத்தில் இவர் நடத்தி வரும் குளிர்பானக் கடையில் கிடைக்கும் வெரைட்டியான சோடா, சர்பத், ஐஸ்கிரீம் ஆகியவற்றைத் தேடி இன்றைய இளைய தலைமுறையினர் இவரின் தொடர் வாடிக்கையாளராகி வருகின்றனர்.  புதினா, இஞ்சி, எலுமிச்சை கலந்த கோலி சோடா, புல்ஜார் சோடா, பால் சர்பத், பூஸ்ட் குலுக்கி மொஜிட்டோ, லெஸ்ஸி, பலூடா ஐஸ்கிரீம் என விதவிதமாகத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் சூர்யா.
”டிகிரி முடிச்சிருக்கேன்.  ரெண்டு வருடத்துக்கு முன் திருமணம் ஆகிவிட்டது. கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கல.  கவர்மெண்ட் வேலைய எதிர்பார்த்திட்டு இருக்கிறதை விட  சுயதொழில் பண்ணலாம்னு தோணுச்சு.   வீட்ல எல்லாருக்கும் பேசி ஓகே சொன்ன பிறகு உறவினர் நடத்தி வந்த இந்த சோடா கடையை எடுத்து நடத்த முடிவு செய்தேன்” என்று விவரிக்கிறார்.
வழக்கமான குளிர்பானக் கடையாக நடத்தாமல், வாடிக்கையாளர்கள் தினமும் தேடிவரும் வகையில் புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், சோடா மூலம் தயாரிக்கக்கூடிய புதிய வகை குளிர்பானங்களை யூடியூப் மூலம் தயாரிக்கக் கற்றுக் கொண்டு. அது சரியானதா, உடல் நலத்துக்கு உகந்ததா என்பதை உணவுத்துறையில் பட்டம் பெற்ற தனது தோழிகளிடம் ஆலோசனை பெற்ற பிறகே இதனைச் செய்து வருகிறார்.  இந்த ஏரியாவில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இவருடைய வாடிக்கையாளர்களாக ஆகி உள்ளனர்.
தினமும் காலை முதல் மாலை வரை கடை நடத்திவரும் இவருக்கு இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருவதாகக்  கூறுகிறார்.   அத்துடன் பெண்கள் இதுபோல வித்தியாசமாக யோசித்து சுயதொழில் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.
தற்போது கொரோனா காலம் என்பதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் அணிவது பற்றியும் தனிமனித சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் இந்தப் பட்டதாரிப் பெண்.
– லெட்சுமி பிரியா