கொல்லப்பட்டு 21 ஆண்டுகள் ஆனபின்னும் நினைவில் நிலைத்து வாழும் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்!

புதுடெல்லி: ஏறக்குறைய 35 ஆண்டுகளாக, கிராஹாம் ஸ்டெய்ன்ஸ் ஒடிசாவில் உள்ள சில மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழும் ஆதிவாசி சமூகங்களுடனே வாழ்ந்து அவர்களுக்காக தொண்டாற்றினார். 21 ஆண்டுகளுக்கு முன் தன் இரு மகன்களுடன் எரித்துக் கொல்லப்பட்டார். அவரது 21வது நினைவு நாளில் அவர் வாழ்ந்த ஒடியா மாநிலத்தின் மக்களுக்காக  அவர் ஆற்றிய சேவைகளுக்காக நினைவு கூறப்படுகிறார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஜனவரி 22ம் தேதியன்று, அவர் தன் மகன்களான ஃபிலிப் மற்றும் திமோத்தியுடன், பஜ்ரங் தளத்தில் உறுப்பினராக இருந்த தாரா சிங் உள்ளிட்ட சில வலதுசாரி ஆர்வலர்களால் உயிருடன் எரிக்கப்பட்டார்.  அவர்கள் தங்களது காரில் தூங்கிக் கொண்டு இருந்தபோது இந்தக் கொடூர சம்பவம் நடந்தேறியது.

கிரஹாமுக்கு அப்போது 58 வயது.  அவரது மகன்கள் ஃபிலிப் மற்றும் திமோத்திக்கு முறையே 10 மற்றும் 9 வயது தான். கிரஹாம் ஒரு கிறிஸ்தவ போதகராக இருந்தார் மேலும் அவர் இந்தியாவில் தனது நேரத்தை பாரிபடாவில் உள்ள தொழுநோயாளிகளுடன் கழித்தார். அவர் ஒரிய மொழியைக் கற்றுக் கொண்டதுடன், உள்ளூர் பேச்சு வழக்கான சந்தாலியில் சரளமாகக் கையாண்டார்.

அவரைக் கொன்றவர்கள் அவ்வாறு செய்ததற்கான காரணம், அவர் ஆதிவாசிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதாக நினைத்தார்கள். ஆனால், அந்தக் காரணத்தை ஏற்க அவரின் மனைவி கிளாடிஸ் தொடர்ந்து மறுத்து விட்டார்.

கொடூரமான அந்த கொலைகளைச் செய்த கும்பல் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாரா சிங் தலைமையில் நடைபெற்றது. தாரா சிங் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.  பின்னர், அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

கிரஹாமை அறிந்த மக்களுக்கு அவரது மரணம் ஒரு சோக நிகழ்வு என்பதைக் காட்டிலும் அதிகமான பாதிப்பைக் கொண்டது. அது ஒரு ஆழமான தனிப்பட்ட இழப்பாக மக்கள் உணர்ந்தார்கள்.

இவ்வளவு பெரிய சோகத்தையும் தாங்கிக் கொண்டு, கிளாடிஸ் தனது மகள் எஸ்தருடன் தொடர்ந்து ஒடிசாவில் தங்கி அங்குள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அவர் பணியாற்றியதற்காக 2005 ஆம் ஆண்டில் அவருக்கு இந்திய ஜனாதிபதியால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.