ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ராணுவத்தில் உயர் பதவிகள்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ராணுவத்தில் உயர் பதவிகள் வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படுவதில்லை என்று 1993ம் ஆண்டு முதல் ராணுவத்தில் சேர்ந்த 332 பெண்கள் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில், பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.  ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்கள், பெண்களின் தலைமையை சில ஆண்கள் ஏற்கமாட்டார்கள்.

பெண்களுக்கு குடும்ப பொறுப்புகளும் உள்ளது. இடமாற்றங்கள், பிரசவ கால விடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பெண்களுக்கு உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு பதில் அளித்த எதிர்தரப்பினர், நமது அரசியலமைப்பிலே ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எனவே, ராணுவத்தில் உயர் பதவியில் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த டி.ஒய்.சந்திரசூட், அஜய் ரஸ்தோகி  அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ராணுவத்தில் சேவை செய்ய பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களை உயர்பதவியில் நியமிக்க வேண்டும்.

உடலியல் சார்ந்த விஷயங்ளை வைத்து பெண்களின் வலிமையை நிர்ணயிக்க முடியாது. நாட்டில் கடுமையான சூழ்நிலைகளிலும் கூட அவர்கள் தங்கள் வலிமையை நிரூபித்து இருக்கின்றனர்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தரப்பு தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 3 மாத காலத்திற்குள் ராணுவத்தில் தகுதியான பெண்களை உயர்பதவியில் நியமிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.