சென்னை: வியாழன், சனி கோள்கள் இன்று  ஒன்றாக காட்சியளிக்கும் அதிசயம் நடைபெற உள்ளது. 397 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த அரிய நிகழ்வை,  விஞ்ஞானி தகவல்வெறும் கண்ணால் காணலாம் என பிர்லா கோளரங்க இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11.9 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல சனி கிரகம் சூரியனை சுற்றுவதற்கு 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும் இரு கோள்களும் 21-ந்தேதி மாலை ஒரே நேர் கோட்டில் நமக்கு காட்சி அளிக்கின்றன. அதுபோல, ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை “வியாழன் – சனி சேர்க்கை’  நிகழ்வு நடைபெற்று வருகிறது.  ஆனால், இந்த நிகழ்வுகள் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 21ந்தேதி  தெரியும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து,  கூறிய சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன், இதுபோன்று கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி செவ்வாய்க்கோள்  பூமிக்கு மிக அருகில் வந்தது. அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று (திங்கட்கிழமை) பூமிக்கு அருகில் வருகின்றன.

வாயு கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.

சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் என்றாலும், இதேபோன்று ஒன்றாக காட்சியளித்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது.  தற்போதைய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வருகிற 2080-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதிதான் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.

20 ஆண்டுகளுக்கு ஒருமுறை… இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ந் தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை இன்று நாம் காணலாம். அடுத்து இந்த 2 கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு, 2040-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியும், அதற்கு பிறகு 2060-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதியும் நடக்க இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

300 ஆண்டுகளுக்கு பிறகு இருகோள்கள் அருகருகே வரும் அதிசயம்; 21ந்தேதி வெறும் கண்ணால் காணலாம்…