இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்

கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவில் நிலவியிருந்த எண்ணத்தை மட்டும் அல்ல இந்தியாவையே மாற்றியது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை என்றால் மிகையாகாது.

1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் 8 அணிகளுள் ஒன்றாக ‘பத்தோடு பதினொன்றாக’ தான் இந்திய அணி இங்கிலாந்து சென்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் இறுதி போட்டியில் அதிக ரன்களை எடுத்தவருமான ஸ்ரீகாந்த் தனது ஒரு பேட்டியில், “லீக் போட்டியிலேயே இந்தியா வெளியேறிவிடும் என்ற எண்ணத்தில் தான் சென்றோம்” என்று கூறியிருந்தார்.

அணியில் இடம் பெற்றிருந்த ஒரு வீரருக்கே இந்த எண்ணம் என்றால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

முதல் லீக் போட்டியில் அதுவரை இரண்டு உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், யாரும் எதிர்பாராத விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியை தனது முதல் போட்டியில் வென்றது இந்தியா, இது ஏதோ கனவில் நடந்தது என்று கூறியவர்கள் தான் ஏராளம்.

பின்னர் நடந்த லீக் போட்டியில் பெரிதாக சோபிக்க வில்லை என்றாலும், கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வென்றால் அரையிறுதி போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில், 18 ஜூன் 1983 அன்று நடந்த அந்த போட்டி இந்தியாவை மட்டுமல்ல கிரிக்கெட் அரங்கில் கபில் தேவ் எனும் அற்புத விளையாட்டு வீரர் யார் என்று கண்டுகொண்ட தினமாகவே இன்று வரை கருதப்படுகிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதலில் ஆடிய இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் தனி ஒருவனாக போராடி 138 பந்துகளில் 175 ரன்களை குவித்து உலக சாதனை படைத்ததுடன், இந்திய அணியை அரையிறுதிக்கு இட்டுச்சென்றார்.

25 ஜூன் 1983, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோத தயாரானது இந்தியா. அரையிறுதியில், 1975 உலக கோப்பை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி கண்ட, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய தெம்போடு, இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி மேற்கு இந்திய தீவு அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 183 ரன்களுக்கு ஆல்வுட் ஆனது, ஸ்ரீகாந்த் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்திருந்தார்.

இரு முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 183 ரன்கள் எடுப்பது கடினமல்ல என்று இந்திய அணியினர் உள்ளிட்ட அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் மட்டும் மனம் தளராமல் பந்து வீச்சாளர்கள் உள்ளிட்ட அனைத்து வீரர்களையும் உற்சாக படுத்தினார்.

5 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணியின் பந்து வீச்சில் சீரான இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். 183 என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததோடு 140 ரன்களுக்கு ஆல்வுட் ஆனது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹிந்தர் அமர்நாத் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 3 வது முறையாக நடந்த ப்ருடென்ஷியல் உலக கோப்பையை இந்தியா வென்று சரித்திரம் படைத்தது.

1975 ம் ஆண்டு முதல் முதலாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையே உலக கோப்பை என்ற யோசனையை செயப்படுத்தியது ப்ருடென்ஷியல் என்னும் நிறுவனம், இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பை வென்றது.

பின்னர் மீண்டும் 1979 ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பை வென்றது, இதன் பின் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவெடுத்து நடந்து வருகிறது.