சென்னை :
ரசு விதிமுறைகளை மீறி, ‘நம்பர் பிளேட்’ பொருத்தி இருப்போர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மோட்டார் வாகன சட்டப்படி, அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறி, வாகன பதிவு எண் பலகை எனப்படும், ‘நம்பர் பிளேட்’ பல்வேறு அளவுகளில் பொருத்தப்பட்டுள்ளன; இது சட்டவிரோதமான செயல்.

அதேபோல, வெவ்வேறு நிறங்களிலும், நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் சட்டத்திற்கு புறம்பானது.எனவே, ’70 சிசி’க்கும் குறைவான, இன்ஜின் திறனுடைய இரு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டின், முன் எழுத்து மற்றும் எண்களின் உயரம், 15 மி.மீ., இருக்க வேண்டும். தடிமன், 2.5 மி.மீ., இரண்டுக்குமான இடைவெளி, 2.5 மி.மீ., இருக்க வேண்டும்.அனைத்து இருசக்கர வாகனங்கள், பின் பக்க நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம், 35 மி.மீ., தடிமன், 7 மி.மீ., இரண்டுக்குமான இடைவெளி, 5 மி.மீ., இருக்க வேண்டும்.

அதேபோல், ‘500 சிசி’க்கும் குறைவான, இன்ஜின் திறனுடைய மூன்றுசக்கர வாகனங்களில், முன் மற்றும் பின் பக்க எழுத்து மற்றும் எண் உயரம், 35 மி.மீ., தடிமன், 7 மி.மீ., இடைவெளி, 5 மி.மீ., இருக்க வேண்டும்.’500 சிசி’க்கும் அதிகமான, இன்ஜின் திறனுடைய, மூன்றுசக்கர வாகனங்களில், முன் மற்றும் பின் பக்க எழுத்து மற்றும் எண்களின் உயரம், 40 மி.மீ., தடிமன், 7 மி.மீ., இடைவெளி, 5 மி.மீ., இருக்க வேண்டும்.

மற்ற அனைத்து வாகனங்களிலும், பின் மற்றும் முன் பக்க எழுத்து மற்றும் எண்களின் உயரம், 65 மி.மீ., தடிமன், 10 மி.மீ., இடைவெளி, 10 மி.மீ., இருக்க வேண்டும்.அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டின் பின்னணி நிறம், வெள்ளை; எண் மற்றும் எழுத்தின் நிறம் கறுப்பு. முன் மற்றும் பின் பக்கத்தில், ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில், எண் மற்றும் எழுத்துகள் இருக்க வேண்டும்.

அதேபோல, அனைத்து வர்த்தக வாகனங்களில், நம்பர் பிளேட்டின் பின்னணி நிறம், மஞ்சள்; எழுத்து மற்றும் எண்களின் நிறம் கறுப்பு. முன், பின் பக்கத்தில், இரண்டு வரிசையில், எண் மற்றும் எழுத்துகள் இருக்க வேண்டும்.கடந்த, 2019, ஏப்., 1க்கு பின், புதிதாக வாகன பதிவு செய்த அனைத்து வாகனங்களுக்கும், உயர் பாதுகாப்பு பதிவு எண் தகடு பொருத்தி இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.