சென்னை:

‘பசுமைப் பட்டாசு தயாரியுங்கள் என்று கூறி, தமிழகத்தில் பட்டாசு தொழிலை அடியோடு அழித்து, பட்டாசுக்கு கியூஆர் கோடு, லோகோ போட வேண்டும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, கேலிக்கூத்தாக்கி வருகிறது மோடி அரசு. இது பட்டாசு தயாரிப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்டாசு என்றால் சிவகாசி, சிவகாசி என்றால் பட்டாசு என்பது அனைவரும் அறிந்ததே. பல்லாயிரக்க கணக்கான மக்கள் இந்த தொழிலை காலங்காலமாக நடத்தி வந்த நிலையில், உச்சநீதி மன்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெருக்கடியில் சிக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை பொசுக்கியதோடு மட்டுமல்லாமல், பசுமைப் பட்டாசு தயாரியுங்கள் என்று கூறி,  பட்டாசு தொழிலை யும் கேலிக்கூத்தாக்கி அடியோடு நசுக்கி வருகிறது.

இந்த மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்தியஅரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் கேலிக்கூத்தாகி உள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் தமிழ்நாட்டிலுள்ள சிவகாசி. இங்குதான் நாட்டின் 90 சதவிகிதம் அளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, பட்டாசு தொழிலை அழிப்பதில் மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி 2 சிறுமிகள் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையை தடை செய்யமுடியாது என்று   தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தீபாவளியின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம் அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

குறைவாக மாசுபடுத்தும் மேம்படுத்தப்பட்ட நவீன வகை பட்டாசுகளை (‘பசுமை பட்டாசு’) மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும். என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால், அந்த இடத்தின் காவல் நிலைய அதிகாரி பொறுப்பாக்கப் படுவார், பிறகு அவர்மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதி ஏ.கே சிக்ரி மற்றும் நீதிபதி அஷோக் பூஷண் அடங்கிய நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது உச்சநீதி மன்றம்.

இந்தியாவில் தீபாவளி, தசாரா போன்ற பண்டிகைக் காலங்களில் வானில் வண்ணங்களைத் தெளிக்கும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். பண்டைய காலம் தொட்டு பின்பற்றிவரும் கலாசாரம் என்றாலும், இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசுபாடு ஏற்படுகிறது. சமீபத்தில் நவராத்திரி பண்டிகையின் போதுகூட வடமாநிலங்களில் நடைபெற்ற ராவண வதம் நிகழ்ச்சியில் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி உள்பட பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இப்படி இருக்கும்போது, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “பண்டிகைக் காலங்களில் பசுமைப் பட்டாசுகளை வெடிப்பதைக்கூட பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று குழந்தைகள் உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறுங்கள். பண்டிகையைக் கட்டாயம் கொண்டாட வேண்டும் என்றால் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இன்னும் இரண்டு வாரத்தில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையின் முக்கிய நிகழ்வான பட்டாசு வெடிப்பதில் பொதுமக்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

உச்சநீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்து, பசுமைப் பட்டாசு குறித்து விழிப்புணர்வு இல்லாத நிலையில், அதற்கு தேவையான மூலப்பொருட்களும் தேவையான அளவு கிடைக்காத சூழல் உள்ளது.

நாட்டின் 1,600 பட்டாசு ஆலைகளில்,  28 தொழிற்சாலைகள் மட்டுமே பசுமைப் பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலைமை இப்படியிருக்க பசுமைப்பட்டாசுகளை தயாரிப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் பட்டாசு தயாரிப்பாளர்கள்.  பட்டாசுத் தொழிலுக்கான உரிமம் வழங்கும் அதிகாரியான பெசோ, புதிய தயாரிப்புகளின் மொத்த உற்பத்தியை அங்கீகரிக்க நீண்டகாலமாக வரையப்பட்ட செயல்முறையைக் கொண்டுள்ளது என்றும், தற்போது உள்ள வசதியில், ஒரு நாளில் இரண்டு தயாரிப்புகளை மட்டுமே சோதிக்க முடியும் என்று உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பசுமை பட்டாசுகள் என்றே ஒன்ற இதுவரை தயாரிக்கப்படவில்லை என்று அதிர்ச்சி தகவலை தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், பசுமைப் பட்டாசு என்றால் என்ன என்பதில் அரசு அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை என்று கூறிய மற்றொரு பட்டாசு ஆலை நிறுவனர்,  உச்சநீதி மன்ற உத்தரவு காரணமாக, நாங்கள்  நீண்ட காலமாக உற்பத்தியை  நிறுத்தி வைத்தோம். எங்கள் உற்பத்தி நிலைகள் 50% குறைந்துவிட்டன. நாங்கள் பட்டாசுகளை மட்டுமே செய்கிறோம், ”என்று ஆதங்கப்பட்டார்.

இதுகுறித்து கூறிய சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், மத்திய அரசு வெளியிட்டுள்ள  பச்சை பட்டாசுகளுக்கான லோகோ மற்றும் கியூஆர் குறியீடு குறித்த தகவல், உற்பத்தியாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், பச்சை பட்டாசுகளை ஆதரிப்பவர்கள் கூட மத்தியஅரசின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்றவர், “இது எங்களை மிகவும் மோசமாக பாதிக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“மத்தியஅரசின் உத்தரவுப்படி, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அனைத்து, பொருட்களும் ஆய்வுக்காக 15 நாட்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் கியூஆர் குறியீடு அல்லது சின்னம் எதுவும் அச்சிடப்படவில்லை” என்று தெரிவித்தவர், மத்தியஅரசின் உத்தரவுபடி, பட்டாசு பெட்டிகளில் கூட கியூஆர் குறியீடு அல்லது சின்னம் அச்சிடும் வாய்ப்பு இல்லை என்றும், மத்திய அரசின் இந்த உத்தரவு பட்டாசுத் தொழிலை கேலிக்கூத்தாக்கி உள்ளதாகவும் ஆதங்கப்பட்டார்.

மொத்தத்தில் மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் இணைந்து தமிழகத்தில் குட்டிஜப்பானான சிவகாசியின் தொழிற்வளர்ச்சியை முடக்கி வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

பசுமைப்பட்டாசு:

உச்சநீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்து,  பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் –  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தி வருகிறார். இதன் காரணமாக காற்று   மாசு அளவு குறையும். சராசரி பட்டாசுகள் ஏற்படுத்தும் ஒலியின் டெசிபல் அளவை விட குறைவான ஒலியே  பசுமை பட்டாசுகள் உண்டாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு (2018) பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகு  பசுமைப் பட்டாசை தயாரித்திருப்பதாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் சாம்ராட் கோஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ‘நீரி’யும் (NEERI) பசுமைப் பட்டாசு செய்வது குறித்து கண்டுபிடித்து அறிவித்து உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் நீரி நிறுவனம், பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும் பசுமை பட்டாசு, வெடிக்கும்போது குறைவாகவே மாசுபடுத்தும் என்றும் தெரிவித்து உள்ளது.

பொதுவாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அலுமினியத்தை மூலப்பொருட்களாக வைத்து சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட் ரேட் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

ஆனால் தற்போது கூறப்படும் பசுமை பட்டாசில் சல்பர் மற்றும் கார்பன் தேவையில்லை.  என்றும், அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டாசின் ஒலி அளவு 120–ல் இருந்து 111 டெசிபலாக குறையும். மேலும் காற்று மாசு 70சதவீதமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரி பட்டாசுகளின் விலையை விட பசுமை பட்டாசுகளின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை பசுமை பட்டாசுகள் எப்படி இருக்கும் என்றும் எந்தவொரு புகைப்படமும் வெளியாக வில்லை.  ஆனால் சமூகவலைத்தளங்களில் ‘பசுமை பட்டாசுகள் பச்சையாக இருக்கும்’ மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

மோடி அரசின் கையாலகாததனத்தால், ஏற்கனவே பல தொழில்கள் நசிந்துவிட்ட நிலையில், தற்போது பட்டாசுத் தொழிலும் அடியோடு அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.