ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே பசுமை வழிச்சாலை திட்டம்: எடப்பாடி விளக்கம்

சேலம்:

சென்னை சேலம் இடையே அமைய உள்ள பசுமை வழித்தடம் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே செயல் படுத்தப்படுகிறது தனியாருக்காக அல்ல என்று விளக்கமளித்தார்.

சென்னை சேலம் இடையே அமைய உள்ள 7வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு அந்த சாலை அமைய இருக்கும் 8 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை காரணமாக மலைகள், வீடுகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பகுதி பொதுமக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் களம் இறங்கி உள்ள நிலையில், இன்று சேலம் சென்றுள்ள தமிழக முதல்வர் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை, மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மிகச்சிறந்த திட்டம். இதற்காக நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் சேலம் மட்டுமே பயன் பெறப்போவதில்லை என்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களும் பயன் பெறும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த சாலை திட்டம்,  தாது வளங்களை வெட்டி எடுக்கும் தனியாருக்கு சாதகமான திட்டம் என்பது கற்பனையானது என்ற முதல்வர்,  அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக சில அரசியல் கட்சிகள்  தவறான பிரச்சாரங்கள்  செய்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.

சென்னை சேலம் பசுமை வழித்தடம் எந்த தனியாருக்காகவும் அமைக்கப்படவில்லை என்று விளக்கிய முதல்வர்,  இந்த திட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.