எட்டுவழிச்சாலை அவசியம்!: ரஜினி கருத்து

மக்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ள 8 வழிச்சாலை (பசுமவழிச்சாலை)க்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “காமராஜரை போல் தலைசிறந்த அரசியல்தலைவர், மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பது மக்கள் மற்றும் எனது ஆசையுமாகும்” என்று ரஜினி தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்றார்.

சர்ச்சைக்குரிய 8 வழிச்சாலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுபோன்ற திட்டங்கள் உருவானால்தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும் என்று ரஜினி பதில் அளித்தார். அதே நேரம், விவசாய நிலங்கள் பாதிக்காமல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நல்லது என்றார்.

தமிழருவி மணியன் தனது கட்சியை ரஜினி மன்றத்துடன் இணைக்கப்போவதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு, “அரசியலில் அவர் என்னுடன் இணைய நினைத்தால் மகிழ்ச்சியே” என்றார்.