கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல – அமெரிக்க அதிபருக்கு தகவல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க விரும்புகிறார் என்று வெளியான தகவல்களையடுத்து, “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்று கிரீன்லாந்து தன்னாட்சி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவு டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பகுதியாகும்.

“நாங்கள் வணிகத்திற்கு ஆதரவானவர்கள்தான். ஆனால், எங்களின் தீவு விற்பனைக்கானதல்ல” என்று அத்தீவின் வெளியுறவுத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் அத்தீவை விலைக்கு வாங்க விரும்புகிறார் என்று பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. கடந்த 1946ம் ஆண்டே 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அத்தீவை விலைக்கு வாங்கும் திட்டம் அமெரிக்காவிடம் இருந்தது என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில், அத்தீவில் பருவநிலை ஆய்வுக்கான மையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் போன்றவற்றை வைத்திருந்தது அமெரிக்கா. தற்போதும்கூட, அங்கே ஒரு பெரிய ராணுவ தளத்தை வைத்திருக்கிறது அமெரிக்கா.

இந்த ராணுவ தளம்தான் அமெரிக்க ராணுவ தளங்களிலயே மிகவும் வடக்கே உள்ள ஒன்றாகும். ஏனெனில், ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 750 மைல்கள் தொலைவில் அமைந்த ராணுவ தளமாகும் இது.