சென்னை:

குரூப்-4 தேர்வு முறைகேடு செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேர்வில் முதலிடம் பெற்ற சிவகங்கை நபர், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

முறைகேடு நடைபெற காரணமாக இருந்த குறிப்பிட்ட பயிற்சி மையம் மீது இது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

கிராம நிா்வாக அலுவலர், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு (2019)  செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள்  சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தர வரிசைப் பட்டியலை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட 100 பேரும் விசாரணைக்கு ஆஜராக டிஎன்பிஎஸ்சி  அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக, வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏன், ராமேஸ்வரம், கீழக்கரை போன்ற பகுதிகளில் தேர்வு எழுத வேண்டும் என கேள்வி எழுப்பப்ட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.

அதில், சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ. என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதி, 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தார். இதுவும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதையடுத்து, திருவராஜூவிடம் வரும் 13ந்தேதி விசாரணைக்கு வரும்படி டிஎன்பிஎஸ்சி  தகவல் அனுப்பி உள்ளது.

இது குறித்து கூறியுள்ள திருவராஜு, தான் தற்போது ஆடு மேய்த்து வருவதாகவும்,  இதுவரை 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி இருப்பதாகவும், தனது விடா முயற்சி காரணமாக, தற்போது முதலிடத்தை பிடித்து இருப்பதாகவும், டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு ஆஜர் ஆவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது திருவராஜுவின் வீடு பூட்டி இருப்பதாகவும், அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவராஜு உண்மையிலேயே தலைமறைவாகி உள்ளரா? அல்லது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டரா? என்பது பெரும் புதிராக உள்ளது…

டிஎன்பிஎஸ் குரூப் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் மீது இதுவரை  டிஎன்பிஎஸ்சி நிர்வாகமோ, தமிழக அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு பயிற்சி மையத்தில் படித்து, குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுதி முதல் 100 இடங்களை பிடிக்க முடிந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள வலைதள வாசிகள், அந்த பயிற்சி நிறுவனத்துக்கும் டிஎன்பிஎஸ்சிக்கு உள்ள தொடர்பு என்ன? அந்த பயிற்சி நிறுவனம் மீது இதுவரை விசாரணை மேற்கொள்ளாதது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்…