லக்னோ:

சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தங்களது புகைப்படம் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவேற்ற கூடாது என்று ஃபத்வா (உத்தரவு) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இயங்கி வரும் தரூல் உலூம் தேவ்பந்த் என்ற இஸ்லாமியப் பள்ளி இந்த ஃபத்வாவைப் பிறப்பித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாமா? என்று ஒருவர் தரூல் உலூம் பள்ளியிடம் கருத்து கேட்டிருந்தார்.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு ஃபத்வாவை அப்பள்ளி வெளியிட்டுள்ளது. அதில் தனிப்பட்ட புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தினரின் புகைப்படங்களையோ சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்வதை இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கவில்லை. எனவே அத்தகைய செயல்களில் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் ஈடுபடக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உ.பி. மதராஸாவின் மார்க்க சிந்தனையாளர் முஃப்தி தாரிக் காஸ்மி கூறுகையில், ‘‘தேவையில்லாமல் புகைப்படங்கள் எடுப்பதையே இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவற்றை சமூக வலை தளங்களில் பகிர்வதை எப்படி ஏற்கும்’’என்றார்.