ரோம்: இத்தாலியின் கால்பந்து கிளப் அணிகள், மே மாதம் 18ம் தேதி முதல் தங்களின் குழு பயிற்சி நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூசெப் காண்டே தெரிவித்துள்ளார்.
சிரீ ஏ (Serie A) இத்தாலிய கால்பந்து கிளப் அணிகளுக்கான ஒரு புகழ்பெற்ற போட்டியாகும். கடந்த மார்ச் 9ம் தேதி இந்த சீரி ஏ போட்டி ரத்துசெய்யப்பட்டது.
ஐரோப்பாவிலேயே கொரோனா வைரஸ் காரணமாக முதன்முதலாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. அந்தவகையில், ஐரோப்பாவிலேயே பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் கால்பந்து போட்டியாகவும் மற்றும் ரத்துசெய்யப்பட்ட முதல் கால்பந்து போட்டியாகவும் ஆனது சீரி ஏ.
இதனால், கிளப் வீரர்கள் சமூக இடைவெளி காரணமாக, தனித்தனியாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அனைத்து கிளப் அணிகளும் மே 18 முதல் முழுஅளவிலான குழுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீரி ஏ போட்டிகள் எப்போது துவங்கும் என்று இன்னும் விபரம் வெளியாகவில்லை.