சென்னை:
குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன என சிலர் முறையிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன என சிலர் முறையிட்டுள்ளனர். தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஓ.டி.ஆர். மூலம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தற்காலிகமாக தளர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே 27-ந்தேதி (இன்று) முதல் ஓ.டி.ஆர். நடைமுறை மூலம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாமல் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கும், உதவி இயக்குனர் (தொழில் மற்றும் வணிகம்) பதவிக்கான தேர்வுக்கும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஆதார் குறித்த விவரங்கள் தங்களுடைய ஓ.டி.ஆர். கணக்குடன் இணைக்க தவறிய அல்லது இணைக்க இயலாத தேர்வர்களின் நலனுக்காக அதனை இணைப்பதற்கு அடுத்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

இனிவருங்காலங்களில் தேர்வாணையத்துக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றாலோ ஒருமுறைப்பதிவு, நிரந்தரப்பதிவு மூலம் ஆதார் குறித்த விவரங்களை இணைத்த பிறகே அவ்வாறு செய்ய இயலும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.