சென்னை:

மிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கு சுமார் 16லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு எளிமையாக இருந்தாக கூறப்படும் நிலையில், மொழி பெயர்ப்பில் தவறு மற்றும் தவறான கேள்விகள் இடம்பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுஉள்ளது.

தமிழக அரசுப் பணிகளான, கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், வரித் தண்டலர் உள்ளிட்ட 6491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை நடத்தியது.

இதற்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இத்தேர்வை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் மட்டும் 405 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 281 பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். தேர்வு மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் 81 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் – 4 தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வெழுதிய வர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே வேளையில்,  2 கேள்விகளில் ஆங்கில வினாவுக்கும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த வினாவுக்கும் சில மாறுபாடுகள் இருந்ததாகவும், பொருத்துக வினா ஒன்றில் முதல் லோக்சபா கலைக்கப்பட்ட நாள் என ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, குடியரசு தினம் என தமிழில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், மற்றோரு கேள்வி மொழிப்பெயர்ப்பு தவறாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கூறப்படும்  கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தேர்வை எழுதியவர்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.