டில்லி

நாட்டின் 26 வங்கிகளில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வாராக்கடன் தொகை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளின் வருடாந்திர கணக்கு சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.   அதை ஒட்டி வங்கிகள் தங்களின் வரவு மற்றும் செலவுக்கணக்கை வெளியிட்டு வருகின்றன.   ஒவ்வொரு வங்கிக்கும் வாராக்கடனாக அறிவிக்க ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   ஆனால் இந்த வரவு செலவு கணக்கில் அதை விட பல மடங்கு வாராக்கடன் தொகை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் வாராக்கடன் தொகை ரு.2.5 லட்சம் கோடிகள் அதிகரித்து தற்போது ரூ.7.31 லட்சம் கோடிகளாக உள்ளது.   அதாவது அனுமதிக்கப் பட்ட அளவை விட வாராக்கடன்கள் 141% அதிகரித்துள்ளது.   இதில் இந்த வருடம் மார்ச் மாதம் மட்டும் இது 10.14% அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலே குறிப்பிட்டது மொத்தம் உள்ள 26 வங்கிகளின் கணக்காகும்.  இதில் பொதுத்துறை வங்கிகளில்  இந்த வருடம் மார்ச் மாதம் வாராக்கடன் வளர்ச்சி விகித்ம் 13.41% ஆக உள்ளது.

இன்னும் வங்கிகள் அனைத்தும் தங்களின் முழு வரவு செலவுக் கணக்கை அறிவிக்கவில்லை.   அவ்வாறு அறிவிக்கப்படும் போது வாராக்கடன்களின் தொகை இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.