கேரள நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு: பியூஸ்கோயல் அறிவிப்பு

டில்லி:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் அனுப்பப் பட்டு வரும் நிவாரண பொருட்களுக்கு சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூல் கோயல் தெரிவித்து உள்ளார்.

வரலாறு காணாத வெள்ளப்பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலத்துக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரெயில் மூலம் அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் கிடையாது என்று ரெயில்வே அறிவித்து உள்ளது.  பல இடங்களில் இருந்து வாகனங்கள் மூலமும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரணமாக இறக்குமதி செய்யப்படும் அல்லது நிவாரணமாக அனுப்பப்படும் பொருட்களுக்கு சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், ஐ.ஜி.எஸ்.டி விலக்கும் அளிப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வரி விலக்கு டிசம்பர் 31,2018 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன், சுங்க வரி மற்றும் ஐ.ஜி.எஸ்.டியில் இருந்து நிவாரண பொருட்களுக்கு விலக்கு அளிக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.