ஜிஎஸ்டி பிரதமரின் சர்ஜிகல் ஸ்டிரைக் : ஜிக்னேஷ் மேவானி
பாலன்பூர், குஜராத்
ஜி எஸ் டி அமுலாக்கலும் வேலையில்லா திண்டாட்டமும் பிரதமர் மோடியின் சர்ஜிகல் ஸ்டிரைக் என ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்யும் பயங்கர வாதிகளை அவர்கள் முகாமுக்குள் சென்று ரானுவத்தினர் அழிப்பதற்கு சர்ஜிகல் ஸ்டிரைக் எனப் பெயர். இதன் மூலம் எதிரிகள் அழிக்கப்படுவதுடன் பயங்கர வாதமும் முழுமையாக நிறுத்தப்படும். இவ்வாறு தாக்குதல்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்தது. அதன் நினைவாக பல டிவி சேனல்களில் இது குறித்த செய்தி சமீபத்தில் வெளியாகியது.
குஜராத் மாநிலம் வடகாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி நேற்று பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தேர்தலின் போது பிரதமர் மோடி 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். ஆனால் ஒருவருக்கு கூட அளிக்கவில்லை. இது நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் மீது மோடி நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்.
அவர் நடத்திய மேலும் வலுவான சில சர்ஜிகல் ஸ்டிரைக்குகளும் உண்டு. அவை பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கம் ஆகியவை ஆகும். இதனால் விவசாயிகளின் வருமானம் உயரும், விலைவாசி குறையும் கருப்புப் பணம் அழியும் என பல வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவற்றில் ஒன்றுமே நடக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நமது ராணுவத்தினர் நடத்தியதை விட மகத்தான சர்ஜிகல் ஸ்டிரைக் என இவைகளை சொல்லலாம்” என தெஇவித்துள்ளார்.