டில்லி

ப்ரல் மாத ஜி எஸ் டி வரி வசூல் ரூ.1,13,865 கோடி ஆகி புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமுலுக்கு வந்தது.  பன்முறை வரிகள் விதிக்கப்பட்ட பல பொருட்கள் ஒரே விகிதத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.    அதன் பிறகு வரி விகிதத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன.   அத்துடன் பல பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் இருந்து விலக்கு பெற்றன.

ஜி எஸ் டி வரி அமுலுக்கு வந்து இரண்டாண்டுகள் முடிய உள்ளன.  தற்போது மாதா மாதம் வரி வசூல் அதிகரித்து வருகிறது.   இந்த வரி வசூல்  சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் முதலே அதிகரித்து வருகிறது.   சென்ற இரு மாதங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளன.

ஜிஎஸ்டி வரி வசூல் இந்த வருடம் மார்ச் மாதம் ரூ. 1.06 லட்சம் கோடியாக இருந்தது.   சென்ற கணக்கு வருடத்தில் இதுவே அதிகபட்ச வரி வசூல் நடந்த மாதமாகும்.    இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் ஜி எஸ் டி வரி வசூல் மேலும் அதிகரித்துள்ள்து.

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,13, 865 கோடி ஆகி உள்ளது.    ஜி எஸ் டி அமுலாக்கத்துக்கு பிறகு அதிக வசூல் ஆனது இதுவே முதல் முறையாகும்.  இந்த வரிகளில்  மத்திய ஜிஎஸ்டி ரூ.21,163 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ.28,801 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.54,733 கோடி, செஸ் ரூ.9,168 கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.