ஜி.எஸ்.டி. இழப்பீடு; மத்தியஅரசு மீது 5 மாநிலஅரசுகள் நேரடி குற்றச்சாட்டு

டெல்லி:

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்தியஅரசு வழங்க மறுத்து வருவதாக 5 மாநில நிதி அமைச்சர்கள் கூட்டாக மத்தியஅரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான அரசு  கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது. இதன் காரணமாக நாட்டின் சிறுதொழில்கள் உள்பட பல தொழில்கள் அழிந்து வரும் நிலையில், ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பையும், மத்தியஅரசு வழங்கும் என கூறியது.

ஆனால், மத்தியஅரசு வாக்களித்த படி, ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை சரியான முறையில் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. தற்போதைய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வழங்காமல் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று மாநில அரசுகள் குற்றம் சாட்டி உள்ளன.

இந்த நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்ட்சிகள் ஆளும் 5 மாநில நிதியமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் டெல்லி, மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில், மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் 14 சதவீதத்துக்கு கீழாக குறையும்போது, அதற்கான இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் அனைத்து மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

அதன்படி, மேற்கு வங்கத்துக்கு 1,500 கோடியும், கேரளாவுக்கு 1,600 கோடியும், பஞ்சாப் மாநிலத்துக்கு 2,100 கோடியும், டெல்லிக்கு 2,355 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளதாகவும்,  5 மாநிலங்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டிய இழப்பீடு தொகை 10 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையிட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.