ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு!

டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான வரியை குறைக்க முடிவெடுக்கபட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி ) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நாட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளக ஜிஎஸ்டி வரி சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

gst

ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அமைக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் அவ்வபோது நடத்தப்பட்டு பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கணக்குகளை எளிமையாக தாக்கல் செய்வது குறித்து, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில், 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும், 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவும் முடிவாகி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ” 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு ” உள்ளது என தெரிவித்தார்.