ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: கேரளாவின் ‘செஸ்’ திட்டம் குறித்து விவாதிக்க 7 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது

--

டில்லி:

30வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  இன்று தலைநகர் டில்லியில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதி தொடர்பான செஸ் வரி திட்டம் குறித்து விவாதிக்க 7 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவில் பங்குபெறும் அமைச்சர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில்,  மாநில அரசு சார்பாக பங்குபெறும் அமைச்சர்கள்  வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள  கேரளா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்  நிதி திரட்டும் விதமாக ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதுபோல, கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் கடந்த  20ம் தேதி சந்தித்து கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டுவதற்காக குறுகிய காலத்திற்கு சில பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது பற்றி பரிந்துரைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதற்காக 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், குழுவில் யார் யார் பங்குபெறுவார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று ஜெட்லி கூறினார்.

இதற்கிடையில்,  கடந்த ஆகஸ்டு  மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.93,960 கோடியாக சரிந்துள்ளது. இது இந்த ஆண்டில் மிக குறைவான வசூல் இதுவே என்று கூறப்படுகிறது.   இதனால், அரசின் வருவாயை சரிசெய்யும் விதமாகவும் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் உயரும் எனக் கருதப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 279A (4) ல் செய்யப்பட்ட திருத்தத்தின் படி, ஜிஎஸ்டி கவுன்சில் பேரிடர் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி திரட்டுவது போன்ற முக்கியமான விவகாரங்களுக்காக குறுகிய காலத்திற்கு வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரியை விதிக்கவோ முடியும்.