கலர் டிவி, விமான கட்டணம் உள்ளிட்ட 34 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

வண்ணத் தொலைக்காட்சி, புனித யாத்திரைக்கான விமான கட்டணம் உள்ளிட்ட பல்வேரு அம்சங்களில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை விதிக்கும் பொருட்டு கடந்த வருடம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ( ஜிஎஸ்டி) கொண்டுவந்தது. அதன்படி, அனைத்து பொருட்களுக்கும் 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டது.

gst

பிற்காலத்தில் நித வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்பான முடிவுகளை எடுக்க மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக கொண்ட ஜிஎஸ்டி கவுசிலை மத்திய அரசு அமைத்தது. இந்த கவுசிலின் கூட்டம் அவ்வபோது நடைபெற்று சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று 31வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான இந்த கூட்டத்தில் தங்கள் மாநிலத்திற்கான வரிவிதிப்பு குறித்து அந்தந்த மாநில நிதி அமைச்சர்கள் விவாதித்தனர். இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

அதுமட்டுமின்றி, ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதி மார்ச் 31-க்கு பதிலாக ஜூலை 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகவும், 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீதான வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமரின் ஜன்தன் யோஜானா வங்கி கணக்குகளுக்கான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, அனைத்து மதத்தினருக்கான புனித யாத்திரை மற்றும் பக்தி சுற்றுலாவுக்கான விமான கட்டணத்தின் வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 32 இன்ச் கொண்ட டிவி, கணினியில் வரி 28ல் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. லித்தியம் பேட்டரிகளுக்கான பவர்பேங்க், வாகன டயர்கள் மீதான வரியும் 18% குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விகிதம் வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும், இன்று குறைக்கப்பட்ட இந்த வரிகள் மூலம் சுமார் ரூ.5,500 கோடி வருமானத்தை அரசு இழக்க நேரிடும் என அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

100 ரூபாய்க்கும் அதிகமான சினிமா டிக்கெட் மீதான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகவும், 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட் மீதான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆடம்பரப் பொருட்களுக்களின் மீதான வரியை மட்டுமே அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பால் எந்த பலனும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. அவர்களை பாதிக்கும் எந்தப் பொருட்களுக்கும் வரி குறைப்பு செய்யப்படவில்லை. அனைத்தும் நவநாகரீகப் பொருட்களுக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.