சென்னை,

த்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி காரணமாக மீனவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.

காய்ந்த மீனுக்கு (கருவாடு)  5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது,  தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கடலில் ஏற்படும் சீதோஷ்ண நிலை, கடல் கொந்தளிப்பு போன்றவைகளில்  கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நிலை குறைந்து விடுகிறது.

பொதுவாக இதுபோன்ற நேரங்களில்  ஏற்கனவே பிடிக்கப்பட்ட மீனை காய வைத்து, கருவாடாக மாற்றி , அதை வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.

ஆனால், தற்போது  மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 சதவிகித ஜிஎஸ்டி காரணமாக கருவாடு களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறுகிறார்கள்.

ஒரு நாளைக்கு சுமார் 1500 மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். இதில் பாதி அளவு மீன்கள் கருவாடாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பு, கருவாடுகளை வாங்க பல வியாபாரிகள் வருவார்கள் என்றும், கையிலே பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்கள், ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பெரும்பாலான வியாபாரிகள் கருவாடு வாங்க முன் வருவதில்லை என்று  வருத்தத்துடன் சொல்கின்றனர்.

ஜிஎஸ்டி காரணமாக தங்களது  வியாபாரம் 50 சதவிகிதம் அளவுக்கு குறைந்து உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாளைக்கருவாடு, நெத்திலிக்கருவாடு, கிளிச்சா கருவாடு போன்ற அதிகமாக விற்பனையாகும் கருவாடுகள்  ஜிஎஸ்டி காரணமாக விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாகவும், தற்போதுள்ள சீதோஷ்ன நிலை மாற்றமால்,  விற்பனையாகாத  ஏராளமான கருவாடுகள் கெட்டு போனதாகவும், இதன் காரணமாக தாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றும் கூறி உள்ளனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுபோன்ற காலங்களில்  தங்களுக்கு மாற்று வழியில் வருமான வரும் வகையில் மாற்றுவழியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும், வலை பின்ன உதவும் நைலான் கயிறுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், தங்களது செலவினம் மேலும் அதிகரித்துள்ளதாக வருத்தப்பட்டு தெரிவித்துள்ளனர்.